தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், நேற்றுமுதல் (15.09.2021) வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் மோதிப் பார்க்க ஆயத்தமாகிவருகின்றன. அந்த வகையில், திமுகவுக்கு சில கட்சிகள் தற்போது கூடுதலாக ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுகவை பொறுத்தவரையில் அதன் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, தற்போது கூட்டணியிலிருந்து வெளியேறியது.
இது ஒருபுறம் இருக்க, மற்ற கட்சிகளின் கூட்டணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. கடந்த தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் நேற்று தெரிவித்திருந்தார். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தற்போது தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.