![Indirect election postponement in ranipet district nemili union](http://image.nakkheeran.in/cdn/farfuture/vgoqeysoF-a2Cu0WICdiUp-Z62sTC1xoqMkQ8WUftio/1634881497/sites/default/files/inline-images/th%201%20_0.jpg)
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்துமுடிந்து கடந்த 20ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். நெமிலி ஒன்றியத்தில் 19 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக 8, அதிமுக 4, பாமக 5, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், அக்டோபர் 22ஆம் தேதி (இன்று) தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பில் தலைவர் பதவி பட்டியலினத்தவர் / பழங்குடியினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. காரணம், தேர்தலுக்கு முன்பு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பதவி பொதுப்பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகளும் அதற்கு தகுந்தாற்போலவே வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.
தேர்தல் முடிந்தபின் அது எப்படி எந்த அறிவிப்பும் இல்லாமல் தலைவர் பதவியைப் பட்டியலினம் / பழங்குடியினம் என அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த மனோகரன் என்கிற கவுன்சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கேள்வி எழுப்பியதும், தவறு நடந்துவிட்டது என தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்டது. அடுத்த 7 நாட்களுக்குள் அறிவிப்பு செய்து மறைமுக தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதி தேர்தல் என அறிவித்துள்ளார் நெமிலி ஒன்றிய தேர்தல் அதிகாரி.