தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று (22.10.2021) நடைபெறுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், சுமார் 3 ஆயிரம் கிராம ஊராட்சி துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் முடியும். தேர்தல் நடத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டும்தான் இந்த மறைமுக தேர்தல் நடத்தப்பட வேண்டும். வேறு இடத்தில் நடத்தினால் அது செல்லாது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையைவிடக் குறைவான உறுப்பினர்கள் வந்திருந்தால் தேர்தல் நடத்தக் கூடாது. பெரும்பான்மை உறுப்பினர்களின் வருகைக்காக 30 நிமிடங்கள்வரை காத்திருக்க வேண்டும். 30 நிமிடங்களுக்குப் பிறகும் பெரும்பான்மை எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வரவில்லை என்றால் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு பதவிக்கு இரண்டு பேர் சமவாக்குகளைப் பெற்றால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறைமுக தேர்தல் தொடங்கிய நிலையில் வேலூர் மாவட்ட ஊராட்சிமன்றக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த மு. பாபு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஊராட்சிமன்றக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஜெயசந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவராக திமுகவின் ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவுன்சர்கள் புடை சூழ திருப்பத்தூர் ஆலங்காயம் ஒன்றியக்குழு அலுவலகத்துக்கு திமுக கவுன்சிலர்கள் வருகை புரிந்துள்ளனர்.