கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவன தலைமையகத்தில் இந்திய நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கரோனா தொற்று பரவல் காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் பங்கேற்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்.எல்.சி முதன்மை மேலாண் இயக்குனர் ராகேஷ் ஷர்மா தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசும்போது, "ஒடிசா மாநிலம், தாலபிராவில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி 2 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கும் இரண்டு சுரங்கங்கள் துவங்கப்பட்டன. இச்சுரங்கங்கள் முழு உற்பத்தியை எட்டியபின் ஆண்டுக்கு நமது சுரங்க உற்பத்தி 5 கோடிய 6 லட்சம் டன்னாக அதிகரிக்கும். அந்தமான் நிகோபார் தீவுகளில் 20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்திட்டத்தில் மின் உற்பத்தி துவங்கியதன் மூலம் நமது மொத்த மின் உற்பத்தியளவு மணிக்கு 56 லட்சத்து 61 ஆயிரத்து 60 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் நமது நிறுவனம் 9,133 கோடியே 29 லட்சம் மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது 2018–19-ஆம் ஆண்டில் 8,059 கோடியே 27 லட்சமாக இருந்தது. கடந்த நிதியாண்டை விட 13.33 சதம் அதிமாகும். கடந்த 2018 –19ம் நிதியாண்டில் நமது நிறுவனம் 45.30 சதவீத பங்கு ஈவுத் தொகை வழங்கிய நிலையில், 2019–20-ஆம் ஆண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத்தொகையாக 70.60 சதவீதத்தினை பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடியை நாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிறந்த நிறுவனத்திற்கான நவரத்னா தகுதி பெற்ற நிறுவனங்கள் பிரிவில் கடந்தாண்டு விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியானதாகும் என்று குறிப்பிட்டார்.
விழாவில் நெய்வேலி ஜவஹர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 100 சதம் மாற்றுத்திறனாளி மாணவி ஜி.வி.ஓவியா 10ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்வெழுதி 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்றதற்காக பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் இயக்குனர்கள் விக்ரமன், என்.என்.எம்.ராவ், ஷாஜி ஜான், ஜெய்குமார் ஸ்ரீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். நெய்வேலி நகரிய பகுதியில் கொரனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் விழாவில் பங்கேற்க தனி பகுதி அமைக்கப்பட்டிருந்தது.