தமிழகத்தில் தி.மு.க. பிரமுகர், திரைப்படத் தயாரிப்பாளர், படம் விநியோகஸ்தர் தொடர்புடைய 25- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சாரதி சிமெண்ட் நிறுவனம், கல்குவாரி உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகிறார். அ.தி.மு.க.வின் வர்த்தகப் பிரிவில் மாவட்டச் செயலாளராக இருந்த இவர், அண்மையில் தி.மு.க.வில் இணைந்தார். வரி ஏய்ப்பு புகாரில் ஆற்காட்டில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தில் இரண்டாவது நாளாக சோதனை நடந்து வருகிறது.
சாரதியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும், வேப்பேரி, ஆலந்தூரில் உள்ள நிதி நிறுவனங்களிலும் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்று வருகிறது. ஆலந்தூரில் உள்ள தாதுமணல் நிறுவனம், செங்கல்பட்டில் உள்ள தனிஅயர் குவாரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன.
இதேபோல், குவாரி உரிமையாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான குமாரின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை ரூபாய் 500 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சோதனை முடிந்த பிறகு விவரங்கள் தெரிய வரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றன. மேலும், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.