திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 850 ஊராட்சிகளில் பெரும்பாலான ஊராட்சிகளில் சாராய விற்பனை படு ஜோராக விற்பனையாகிறது. இதனை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஏ.டி.எஸ்.பி அசோக்குமார் தலைமையிலான டெல்டா தனிப்பிரிவு போலீஸார் தீவிரமாக ரெய்டு நடத்தி சாராய விற்னையாளர்கள், உற்பத்தியாளர்களை கைது செய்து வருகின்றனர். அதோடு, சாராய ஊறல்களை அழித்தும் வருகின்றனர். ஆனாலும் சாராய விற்பனை என்பது முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. விற்பனை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, டெல்டா தனிப்பிரிவு போலீசார் இணைந்து நடத்திய சாராய வேட்டையில் ஆங்குணம், எலந்தபட்டு பகுதியில் ஆங்குணம் பகுதியில் 1000 லிட்டர் சாராய ஊறலும், எலந்தபட்டு பகுதியில் 600 லிட்டர் சாராய ஊரலும் கைப்பற்றி அங்கேயே அழித்தனர்.
அதேபோல் தாலுகா டி.எஸ்.பி ஹேமசித்ரா தலைமையில் தண்டராம்பட்டு காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடத்திய வேட்டையில் வேப்பூர்செக்கடி பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. ஒருநாளில் 2600 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாராய ஊறல் அழிக்கப்பட்டதே தவிர சாராய உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் கைதாகவில்லை, சாராய விற்பனையாளர்கள் மட்டும்மே கைதாகி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. சாராயத்தை கொண்டு வந்துதரும் ட்ரான்ஸ்போர்ட்டர்களை மடக்கி கைது செய்ய தொடங்கி, வாகனங்களை பறிமுதல் செய்தால் மாவட்டம் முழுவதும் சாராயம் செல்வது தடைபடும் என்கின்றனர் மதுவுக்கு எதிரானவர்கள்.