திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த ரெட்டியார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி.
அந்த மாணவியும், மலையனூர் செக்கடி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான முருகன் என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவி நான்கு மாதம் கர்ப்பிணி ஆனதையடுத்து முருகன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அம்மாணவியின் உறவினர் பிரபு ஆகியோர் இணைந்து கருக்கலைப்புக்கு மாத்திரை வழங்கியுள்ளனர்.
மாத்திரை சாப்பிட்டதும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பத்தாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தானிப்பாடி போலீசார் முருகன் மற்றும் பிரபு ஆகியோரை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
அதே நேரத்தில் கருக்கலைப்பு மாத்திரை தந்த போலி பெண் மருத்துவர் ஒருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சில ரோமியோக்கள் காதல் என்கிற பெயர்களில் சிறுமிகளை தங்களது ஆசை இச்சைக்கு பயன்படுத்துகின்றனர். இப்படி பல கருக்கலைப்புகள் போலி மருத்துவர்களால் நடந்து அது மறைக்கப்படுகிறது. அதனால் பள்ளிகளில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, வாழ்வியல், உளவியல் குறித்து கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.