
'எங்கள் தற்கொலை முடிவுக்கு எங்களது வளர்ப்பு மகனே காரணம்' என எழுதிவைத்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவில் வசிந்துவந்தனர் ராமசாமி - மாரியம்மாள் தம்பதி. இவர்களுக்குத் திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாததால் 21 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து அஜித்குமார் என பெயர்சூட்டி வளர்த்துவந்தனர். ராமசாமி - மாரியம்மாள் தம்பதி வளர்ப்பு மகன் அஜித்துக்காக 'அஜித் இல்லம்' என்ற வீட்டையும் கடந்த 2007ஆம் ஆண்டு கட்டியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வாலிபரான அஜித்குமார், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகிப் பெற்றோர்களிடம் அடிக்கடி சண்டைபோடுவது, மிரட்டுவது எனக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சில மாதங்களாகச் சொத்துக்களைத் தனது பெயரில் எழுதிவைக்க வேண்டும் எனப் பிரச்சனை செய்துவந்துள்ளார் அஜித்.

இதனால் மனமுடைந்த தம்பதியினர் சில நாட்களாக வீட்டில் இல்லாத நிலையில் இருவரையும் உறவினர்கள் தேடிவந்தனர். ஆலங்குளத்திற்கு வெளியே இருக்கும் சீவலசமுத்திரம் என்ற இடத்தில் சொந்த தோட்டப்பகுதியில் ராமசாமி - மாரியம்மாள் தம்பதி கீழே விழுந்து கிடப்பதாகத் தகவல் வெளியாக, உறவினர்கள் சென்று பார்க்கையில் பூச்சி மருந்து குடித்து இருவரும் ஆபத்தான நிலையில் கிடந்தது தெரியவந்தது. இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் அருகிலேயே ஒரு சிறிய டைரி ஒன்றும் இருந்தது. அதில், ‘எங்கள் தற்கொலை முடிவுக்கு எங்களது வளர்ப்பு மகன் அஜித்தே காரணம். அவனுக்கு வீடோ தோட்டமோ கிடையாது. அவனை வீட்டைவிட்டுத் துரத்த வேண்டும்’ என எழுதப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பாப்பாக்குடி போலீசாரிடம் உறவினர்கள் புகார் தெரிவிக்க, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)