மாயக்கண்ணாடி இருப்பதாகக் கூறி ஒரு லட்ச ரூபாயைப் பறித்துச் சென்ற சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மாயக்கண்ணாடி இருப்பதாகக் கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் இருவருக்குத் தொடர்பிருக்கும் நிலையில் அரசமுத்து என்ற நபரை முதற்கட்டமாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மற்றொரு நபரைத் தேடிவருகின்றனர்.
கடந்த 12ஆம் தேதி திருச்சியிலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தது. திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. இவருக்குத் தாலி தோஷம் இருப்பதாகவும் அதனால் தாலிக்குப் பூஜை செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் எனவும் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் கூறியுள்ளார். இதனை நம்பிய சுகந்தி, அவரது ஒன்றரை பவுன் தாலிச் சங்கிலியைக் குடுகுடுப்பைக்காரரிடம் கொடுத்துள்ளார். அதனை மோசடி செய்து அவர் ஏமாற்றி எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், தாலிச் சங்கிலியைப் பறிகொடுத்ததை உணர்ந்த சுகந்தி மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாக, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சுகந்தியின் உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.