சுதந்திரமடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட இன்னும் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு மக்கள் பிரச்சனை இருந்து கொண்டே தான் உள்ளது. பல கிராமங்களில் முக்கியமான பிரச்சனை இடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லை என்பது தான். பாதை வசதி இல்லாததால் நெல் கதிர்களோடு வயல், வரப்பு, ஆறு, வாய்க்கால், சேற்றுக்குள்ளும் இறங்கித் தூக்கிச் சுமக்கிறார்கள். இவர்களின் பல வருடக் கோரிக்கை சுடுகாட்டுக்குப் பாதை என்பதாக இருந்தாலும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள வீரியங்கோட்டை கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் ராக்கன் மகன் மகாலிங்கம் இறந்துவிட்ட நிலையில் அவரது உடலை அலங்கரிக்கப்பட்ட சொர்க்க ரதத்தில் ஏற்றிச் செல்ல உறவினர்களுக்கு ஆசை தான். ஆனால் நடுவில் கல்லணை கால்வாய் கிளையாற்றில் தண்ணீர் போவதால் அந்த ஆசை நிராசையானது. வீட்டில் இறுதிச் சடங்குகள் செய்த பிறகு பாடையில் ஏற்றித் தூக்கிச் சுமந்த உறவுகள் இடையில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி அடுத்த கரைக்குச் சென்று சுமார் 3 கி மீ தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர். யார் இறந்தாலும் இப்படித்தான் ஆற்றில் நீந்தி சடலங்களைச் சுமக்கிறோம் என்றவர்கள் ஒரு பாலம் இருந்தால் இந்த அவல நிலையை மாற்றலாம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இதே பிரச்சனை ஏராளம் உள்ளதால் தமிழக அரசு சிறப்புத் திட்டமாக மயான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்தால் தலைமுறைக்கும் வாழ்த்துவார்கள்.