சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் பெண்ணிடம் அத்துமீறி தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழகப்பா பல்கலை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்துவரும் அசோக் கோபிநாத் என்ற மாணவன், அவர் வாங்கிய புது இருசக்கர வாகனத்திற்காக அவரது நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளான். அவருடைய நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்த கோபிநாத், அதன் பிறகு அவர்களைச் சாப்பிடுவதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளான். அப்பொழுது அதே உணவகத்திற்கு உணவு பார்சல் வாங்கப் பெண் ஒருவர் அவரது கணவருடன் வந்திருந்தார். கணவர் ஹோட்டலின் உள்ளே உணவு பார்சல் வாங்கக் காத்திருந்த நிலையில் இளம்பெண் கடையின் வாசலிலேயே கணவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த அழகப்பா கல்லூரி மாணவர்களில் ஒருவனான முகமது சல்மான் என்பவன் போதையில் தள்ளாடியபடியே ஹோட்டலுக்குள் நுழையும்போது வெளியில் நின்ற அந்த இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். அவரது தலையிலிருந்த பூவை கைகளால் இழுத்துவிட்டுச் சென்றுவிட்டான். இதனால் பதறிப்போன அந்த இளம்பெண் ஹோட்டலுக்குள் சென்று பார்சலுக்காக காத்திருந்த கணவரிடம் அமர்ந்துகொண்டார். அதன் பின்னரும் விடாத முகமது சல்மான் என்ற அந்த மாணவன் ஆபாச சைகை காண்பித்து அழைத்துள்ளான். இதனையடுத்து அப்பெண்ணின் கணவர் அவருக்குத் தெரிந்த நபருக்கு தொலைப்பேசியின் மூலம் தகவலளித்துள்ளார்.
இதனைத் தெரிந்து கொண்ட முகமது சல்மான் அந்த பெண்ணின் கணவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயல, பெண்ணின் கணவரும் அவனை எச்சரித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கஞ்சா போதையிலிருந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இளம்பெண்ணின் கணவரைக் கடுமையாகத் தாக்கினர். ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் தடுக்க முயன்ற போதிலும் அவர்கள் கஞ்சா போதையிலிருந்ததால் கடுமையாகத் தாக்கத் துவங்கினர். அந்த இளம்பெண் அங்கிருந்த ஊழியர்களிடம் சண்டையை விலக்கி விடுமாறு கதறி அழுதும் யாரும் பெரிதாகத் தடுக்க முன்வரவில்லை.
இந்த காட்சிகள் அனைத்தும் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிய வேண்டாம் எனத் தம்பதியினர் விட்டுவிட்ட நிலையில், ஹோட்டல் கடைக்காரர்களும் நமக்கு எதற்கு வம்பு என்று போலீசாரிடம் புகார் அளிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் ஹோட்டலில் நடைபெற்ற சண்டையின்போது 2 செல்போன்களை மாணவர்கள் தவறவிட்டுள்ளனர். இதனையடுத்து செல்போனை ஹோட்டல் கடை உரிமையாளரிடம் இருந்து மீட்டுத் தருமாறு மாணவர்கள் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரிக்கையில் ஹோட்டலில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போதை மாணவர்கள் முகமது சல்மான், அசோக் கோபிநாத், ஹரிகரன், அஸ்வின் ஆகிய 6 பேரைக் கைது செய்த போலீசார், மேலும் 7 பேரை இது தொடர்பாகத் தேடி வருகின்றனர்.