இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியே கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நிகழ்ந்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் வாகன விபத்தில் சிக்கி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ரங்கராஜனின் மனைவியான ஜோதிமணியும் மற்றும் உறவினர் ராஜாவும் மருத்துவமனையில் இருந்து ரங்கராஜனை டிஸ்சார்ஜ் செய்து, ஆம்னி வேனில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது சாலையில் செல்லும்போது ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து மனைவி ஜோதிமணி மற்றும் உறவினர் ராஜாவிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சாலையில் செல்லும்போது ஆம்னி கார் எரிந்ததாகவும், உள்ளே இருந்த ரங்கராஜனை காப்பாற்ற முடியவில்லை என இருவரும் கூற, போலீசார் துருவித் துருவி விசாரித்ததில், ரங்கராஜன் 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு எடுத்து வைத்திருந்தும், அதில் நாமினியாக மனைவி ஜோதிமணியை குறிப்பிட்டிருந்ததும், அந்த இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை ஆம்னி காரில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து ஜோதிமணி, ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியே கணவனைப் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.