கரோனா வைரஸ் விழிப்புணர்வு என்பது நாம் கும்பிடும் கோயிலிருந்து தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் வரை எதையும் விட்டு வைக்க வில்லை. இன்று நீதிமன்றத்தில் நடந்த அந்த ருசிகர சம்பவத்தை நமது வழக்கறிஞர் பவானி சிவராமன் இப்படி கூறினார்.
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக அங்கு வருகிற வழக்கில் தொடர்புடையவர்கள், கைதிகள், மற்றும் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் வரை அனைவரும் முகப்பில் வைக்கப்பட்டுள்ள கை கழுவும் இடத்தில் நின்று கைகளை சுத்தமாக கழுவிய பிறகு நீதிமன்றத்திற்கு சென்றனர். மாவட்ட நீதிபதி முதல் வழக்கறிஞர்கள் வரை கைகழுவினோம். அப்படித்தான் ஒரு வழக்குக்காக கை கழுவி விட்டு போய் நான் நீதிமன்ற அறையில் இருந்தேன். அப்போது ஒரு குற்ற வழக்கில் தொடர்புடைய ஒரு நபரை பெயர் சொல்லி அழைத்தனர். அப்போது அவர் வரவில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு நபர் அங்கு வந்து என் பெயரை அறிவீர்களா என நீதிமன்ற ஊழியரிடம் கேட்டார். அதற்கு நீதிமன்ற ஊழியர் அப்போது கூப்பிட்டு ஏன் வரவில்லை என கூறியவர், நீதிபதியிடம் தகவலை தெரிவித்தார்.
அதன்பிறகு நீதிபதி அந்த நபரை அந்த குற்ற வழக்கில் ஆஜராக பேர்சொல்லி அழைத்தார். அந்த நபரும் நீதிமன்றத்துக்கு வந்து நீதிபதிக்கு வணக்கம் செலுத்தினார். அப்போது நீதிபதி ஏன் நீதிமன்றத்துக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வர முடியாதா அப்போது அழைத்தோமே எங்கே போனீர்கள் எனக் கேட்க, அந்த நபர் மிக இயல்பாக பெண் நீதிபதியான அவரிடம் ''அம்மா கை கழுவப் போனேன் அம்மா'' என்றார். திடீரென்று அவர் அப்படி சொன்னதும் ஏன் என நீதிபதி அவரை கேட்டார். அதற்கு அந்த நபர் இப்போது எங்கு போனாலும் பிறகு திரும்பி போகும் போதும் கைகளை கழுவச் சொல்கிறார்கள். ஆகவே நான் நீதிமன்றத்துக்கு உள்ளே நுழைந்தபோது கை கழுவும் இடத்தில் கூட்டமாக இருந்தது ஆகவே கைகழுவி விட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள். அதற்கு கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. நான் நன்றாக கைகழுவி விட்டு அதன்பிறகு தான் இங்க வந்தேன் என்றார்.
இதைக் கேட்டு சிரித்த நீதிபதி ஆமாம் ஆமாம் உள்ளே வரும் போது நாங்களும் கைகழுவிவிட்டு தான் வந்தோம் சரி,சரி போகும்போதும் கைகழுவிவிட்டு போங்க என அவரை அனுப்பினார்" என்றார் இப்போது எங்கே நேரம் கடந்து போனாலும் கை கழுவ நேரமாச்சு என கூறி விடலாம்.