பொதுவாகவே பத்திரிகை ஊடக நண்பர்கள் பல்வேறு சங்கங்களின் அங்கம் வகிக்கிறார்கள். சங்கங்களில் இல்லாமல் தனித்தும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் தங்கள் எவ்வளவு சிரமப்பட்டாலும் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் சந்திக்கும் கஷ்டங்களுக்கு எந்த விதத்திலாவது தங்களால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மனிதநேயம் உள்ளவர்கள் தமிழகத்தில் ஏராளம் ஏராளம் உள்ளனர்.
அப்படிப்பட்ட நண்பர்கள் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டத்தில் சிறப்பாக தங்கள் பணிகளுடன் மக்கள் பணியையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்தக் குழுவில் வழிகாட்டியாக உள்ளவர்கள் மேகராஜன், பாபுஜி. இவர்களின் ஒருங்கிணைப்பில் பல்வேறு பத்திரிகை ஊடகத்தில் பணிபுரியும் நண்பர்கள் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக வேப்பூர் மற்றும் அதனை ஒட்டிய சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் வாழ்பவர்களுக்கு தினசரி உணவு தயாரித்து அவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கே நேரடியாகச் சென்று உணவு, தண்ணீர் வழங்கி அவர்களின் பசியை போக்கி வருகிறார்கள்.
தொய்வில்லாமல் தினசரி இவர்கள் செய்யும் இந்த சேவையை கண்டு அப்பகுதி மக்கள் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அதோடு நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தங்கள் குடும்பத்தினர் மனைவி பிள்ளைகளோடு உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு பல நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை சாலையோரம் நட்டு அதை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு பத்திரிகை ஊடகத்தில் பணி செய்யும் நண்பர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தாலும் கூட, பொதுமக்களின் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக வேப்பூர் பகுதி பத்திரிகை நண்பர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் செயல்பாடுகள் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.