கடந்த மூன்று நாட்களாகத் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக் கத்திகள், அரிவாள்கள், ஏழுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி தமிழகம் முழுவதும் ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், திருவெற்றியூரில் திருந்தி வாழ்ந்த ரவுடி ஒருவர் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 12க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீதான வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் முடிந்த நிலையில் தற்பொழுது மனம் திருந்திய ஆறுமுகம் திருந்தி வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆறுமுகத்தின் வீட்டிற்குச் சென்று தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தைச் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். முன்னாள் ரவுடி ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கையில் இரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் கிடந்துள்ளார்.
இதுபற்றி உடனடியாக எண்ணூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த முன்னாள் ரவுடி ஆறுமுகத்தின் உடல் உடற்கூராய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருந்தி வாழ்ந்த ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் வீட்டுக்கு அருகில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில் இந்த வழக்கில் ஜெயக்குமார், பியான் வினோத், கிளின்டன், தேசப்பன், ஆகாஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஆகாஷ் என்பவர் 18 வயது கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. 5 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்தது தெரியவந்தது. திருந்தி வாழ்ந்த ரவுடி நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் எண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.