Skip to main content

மகனை காப்பாற்றி தன்னுயிரை விட்ட தந்தை...-விநாயகர் சிலை கரைப்பின் போது நிகழ்ந்த சோகம்! 

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

incident in chennai

 

விநாயகர் சிலையைக் கடலில் கரைக்கச் சென்றபோது கடலில் விழுந்த மகனைக் காப்பாற்றிய தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி நிகழ்விற்காக வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டுள்ளார். பின்னர் விநாயகர் சிலையை மகன்களுடன் பாலவாக்கம் கடற்கரை பகுதிக்குக் கரைக்கச் சென்றார்.  அப்பொழுது விநாயகர் சிலையைக் கரைக்கும் போது கடலலை அவரது மகனை இழுத்துக்கொண்டு சென்றது. கடல் அலையில் சிக்கிய மகனை சுரேஷ் காப்பாற்றி கரையை நோக்கி வீசிய நிலையில், எதிர்பாராதவிதமாக சுரேஷ் கடல் அலையில் சிக்கினார். அங்கிருந்தவர் சிறுவனைக் காப்பாற்றி விட்டனர். ஆனால் சுரேஷை கடல் அலை இழுத்துச் சென்றுவிட்டது.

 

incident in chennai

 

அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் சுரேசை மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு  அழைத்துச் சென்றனர். ஆனால் இறுதியில் சுரேஷ்  ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற இடத்தில் கடலலையில் சிக்கிய மகனைத் தந்தை காப்பாற்றிய நிலையில், தந்தை கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.