வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, கடலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னையைப் பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. கனமழை பெய்துவரும் மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, நாமக்கல் மாவட்ட மக்களுக்குத் தாமதமின்றி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் 10 நிவாரண முகாம்களில் 337 பேர் தங்கவைக்கப்பட்டு உணவுப்பொருள் தரப்பட்டு வருகின்றன. நெல்லை திருக்குருங்குடி மலையில் கோயிலுக்குச் சென்ற 500 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மழைக்காலத்தில் தொற்று வியாதிகள், டெங்குகாய்ச்சல் போன்றவை பரவாமல் இருக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர உதவிக்குச் சென்னை அவசர கட்டுப்பாட்டு மையத்தின் 1070 என்ற எண்ணிற்கு மக்கள் அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.