சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா வருவார் என தெரிவித்திருந்த நிலையில், பிப்.7 ஆம் தேதிக்குப் பதில் பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்குத் தமிழகம் வருவார் என நேற்று (04.02.2021) டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார்.
சசிகலா விடுதலை செய்திகள் வெளியான தொடக்கத்திலேயே அதிமுக தொண்டர்கள் சிலர், சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டிய நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயன்காரன்புலத்தில், சசிகலாவை வரவேற்று அதிமுக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சசிகலாவுடன் சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் உறவினரான இளவரசி பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் இருந்து இன்று காலை 11 மணிக்கு விடுதலையாக இருக்கிறார்.