Skip to main content

ரூபாய் 70 கோடிக்கு இளங்கோவன் முதலீடு- லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Ilangovan invests Rs 70 crore - Bribery eradication department information!

 

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவருமான இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் மீது சேலத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

 

முதல் தகவல் அறிக்கையில், இளங்கோவன் கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக 131% சொத்து சேர்த்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இளங்கோவன் வருமானத்தை விட ரூபாய் 3.78 கோடிக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். 

 

இந்த நிலையில், இளங்கோவனுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாலை முதலே அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றன. சேலம் மாவட்டத்தில் 23 இடங்களிலும், திருச்சி மாவட்டத்தில் 6 இடங்களிலும், சென்னை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 3 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 

 

இதில், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டறிந்தனர். இந்த நிலையில், இளங்கோவன் ரூபாய் 70 கோடிக்கு முதலீடு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அவரது இடங்களில் நடந்த சோதனையில் கண்டறியப்பட்டது. உள்நாட்டு பங்கு வர்த்தகத்தில் ரூபாய் 25 கோடி, வெளிநாட்டு பங்கு வர்த்தகத்தில் ரூபாய் 45 கோடிக்கு இளங்கோவன் முதலீடு செய்துள்ளார். ரூபாய் 5.5 லட்சம் மதிப்புள்ள அந்நிய செலாவணியும் கண்டறியப்பட்டது.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி நகைக்கடையில் சோதனையின் போது இருப்பை விட கூடுதலாக நகைகள் கண்டறியப்பட்டன. 20 கிலோ தங்க நகைகள், 280 கிலோ வெள்ளி நகைகள் இருப்பை விட கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது. வழக்கில் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என லஞ்ச ஒழிப்புத்துறை இன்று (23/10/2021) தெரிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்