Skip to main content

இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்றால் அது எடப்பாடிக்குதான்-ஸ்டாலின்

Published on 23/09/2018 | Edited on 23/09/2018

நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். பொய் பேசுவதற்கே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். கிடைத்த நேரத்திலெல்லாம் நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று கூறிய நிலையில் முதல்வரின் அந்த பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

 

stalin

 

ஊழல் மூட்டைகள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்காகக் கிடக்கும்" முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, நான் ஏதோ தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக திருவாய் மலர்ந்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

விபத்தில் கிடைத்த “பதவியில் அமர்ந்து விட்டால் பத்தும் பேசலாம்“ என்ற கண்ணியமற்ற அவல மனப்பான்மை அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதால் - ஊழல் பண மூட்டைகளின் மீது அமர்ந்துகொண்டு, அய்யன் திருவள்ளுவர் சிலை இருக்கும் கன்னியாகுமரியில் வாய்மை எதுவும் இல்லாமல் வாய்க்கு வந்தபடி பிதற்றியிருக்கிறார்.

 

 

“கூவத்தூரில்" தொடங்கி, இன்றைக்கு "கோட்டையில்" அமர்ந்திருக்கும் வரை தினமும் பலகோடிகளைக் கொட்டிக் கொடுத்து - அதைத் தன்னுடைய சம்பந்திக்கு தனது துறையிலேயே உள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்திருக்கும்  எடப்பாடி பழனிசாமி ஊழல் பற்றிப் பேசும் தார்மீகத் தகுதியை எப்போதோ இழந்து விட்டார்.

 

கோடி கோடியாய் பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்த பதவி விரைவில் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் மத்திய பா.ஜ.க.விற்கு "அடிமைச் சாசனம்" எழுதிக்கொடுத்து விட்டு ஆட்சியில் நீடிக்கும் முதலமைச்சர் என் மீது பாய்ந்திருப்பது, தன்னை நோக்கி அணி வகுத்து வந்து கொண்டிருக்கும் -

 

இனியும் வரப்போகும் ஊழல் வழக்குகளில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என்ற அச்சத்தின் விளைவே என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

 

 

கட்சிக்குப் பொதுச் செயலாளரும் இல்லாமல், புதிய கட்சி விதிகளை உருவாக்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஏற்படுத்தி அமர்ந்து, அந்த விதிகளும் தேர்தல் ஆணையத்தின் முன்பும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்பும் உள்ள விசாரணையால் "தொங்கலில்" நிற்கும் ஏமாற்றத்தில், ஆதங்கத்தில் "உள்கட்சி ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை" என்று கேட்கும் அ.தி.மு.கவின் ஒரு பிரிவை நடத்திக் கொண்டிருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி சிறிதும் கூச்சமோ, வெட்கமோ இல்லாமல் பேசியிருப்பது - அங்கே நடைபெற்ற அரசு விழா என்கிற தரத்தை அப்படியே சாக்கடையில் இறக்கியிருப்பதற்குச் சமமாகும்.

 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட என்னைப் பார்த்து, நூற்றுக்கு நூறு சதவீதம் "கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்த" திரு பழனிசாமி கூக்குரலிடுவது  வெந்துகொண்டிருக்கும் பொறாமையே தவிர, பொறுப்புள்ள பொருத்தமான பேச்சு அல்ல! திரு எடப்பாடி பழனிசாமி உண்மையில் கொல்லைப்புற வழியாக அதிமுகவை கைப்பற்றியவர் - கொல்லைப்புற வழியாக திரு ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து முதலமைச்சர் பதவியைப் பறித்தவர் - கொல்லைப்புற வழியாக மறைந்த ஜெயலலிதாவிற்கு அளித்த வாக்குகளை வைத்து, இன்றுவரை ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்

 

 

 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட வழக்கு இன்னும் டெல்லி நீதிமன்றத்திலும் அலை பாய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலே, "கொல்லைப்புறமாக" ஆட்சிக்கும், கட்சிக்கும் வந்து இன்றைக்கு நீதிமன்றத்தின் நீண்ட படிக்கட்டுகளில் திரு எடப்பாடி பழனிசாமி அலையாய் அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

 

 

 

இந்தியாவிலேயே "ஊழலுக்காக சிறை சென்ற ஒரே முதலமைச்சரைப்  பெற்ற கட்சி" அ.தி.மு.க - அதுவும் நாட்டின் உச்சநீதிமன்றத்தால் ஊழலுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட பொதுச் செயலாளரைக் கொண்ட கட்சி அ.தி.மு.க. அண்டை மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் ஊழலுக்காக சிறை வைக்கப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட கட்சி அ.தி.மு.க. இன்றைக்கு  தனது சம்பந்திக்கே ஒப்பந்தங்களை கொடுத்து ஊழல் செய்யும் ஒரு முதலமைச்சரைக் கொண்ட ஆட்சி அ.தி.மு.க ஆட்சி.

 

 

அது மட்டுமின்றி தனது அமைச்சரவை சகாக்களையும் அவரவர் உறவினர்களுக்கும், சகோதரர்களுக்கும் ஒப்பந்தங்களைக் கொடுத்து ஒட்டுமொத்தமாக போட்டிபோட்டுக்கொண்டு  ஊழல் செய்வதைப் பார்த்து ரசிக்கும் ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே தேடித் தேடி கண்டுபிடித்தால் அது - எடப்பாடி பழனிசாமிதான்!

 

 

 

அகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் இருக்கும்  எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்த்தும், தி.மு.க.வைப் பார்த்தும் ஊழல் என்று கடைந்தெடுத்த "பொய்யுரை" நிகழ்த்துவது அரசு கஜானாவில் அடிக்கும் கொள்ளைப் பணத்தின் தழும்பேறிய ஆணவமே தவிர வேறு ஏதுமில்லை.

 

 

மாநில மக்களின் நலனுக்காக நேர்மையான ஆட்சியை வழங்குவதிலோ, திறமையான நிர்வாகத்தை அளிப்பதிலோ, கட்சிக்குள்  உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டி அதைப் போற்றிப் பாதுகாப்பதிலோ திராவிட முன்னேற்றக் கழகத்தையோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியையோ, எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கும் அ.தி.மு.க வின் பிளவுபட்ட பிரிவால் ஏணி வைத்து கூட எட்டிப் பார்க்க முடியாது என்பதை திரு எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

 

 

அணி வகுத்து வரும் ஊழல் வழக்குகளே அவருக்கு அதை விரைவில் எளிதில் புரிய வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் எனக்கு இல்லை. ஆகவே, அ.தி.மு.க விற்குள் ஒரு பிரிவை கைப்பற்றி கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்து மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஊழல் பற்றியோ, உள்கட்சி ஜனநாயகம் பற்றியோ உரக்கப் பேசாமல் இருப்பது அவருக்கும் நல்லது - அவருடைய பிரிவுக்கும் நல்லது - நாட்டிற்கும் நல்லது என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனக்கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுட்டுப் போயிருக்காரு...” - விஜய பிரபாகரன் உருக்கம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Vijayaprabhakaran campaigned in Virudhunagar

சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.  எங்க அப்பா கேப்டன்,  விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.

நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு.  என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது,  அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல.  ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான்,  கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி  அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.

இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி.  இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல,  அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு.  அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும்,  சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.

இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா,  எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.