பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். தமிழகம் வந்த அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ஜெ.பி. நட்டா சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 2024 தேர்தல் பணிகளுக்காக பாஜகவின் பல்வேறு தலைவர்களை சந்தித்த அவர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு சென்றார். அங்கு மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு 2024 தேர்தல் பணிகளை குறித்து கலந்து ஆலோசித்த அவர் இரவு நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசினார்.
இதன் பின் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் இருள் சூழ்ந்ததை போல் திமுக ஆட்சி சூழ்ந்துள்ளது. பெட்டிக் கடையில் தேன் மிட்டாய் வாங்குவது போல் கஞ்சாவை வாங்கி வருகின்றனர். ஆனால் அவர்களை எல்லாம் கைது பண்ணாமல் தமிழகம் முழுவதும் பாஜக தொண்டர்களை குறிவைத்து கைது செய்து கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தில் 4 கோடிக்கும் அதிகமான பெண்கள் இருக்கின்றனர். ஆளுங்கட்சியின் எம்.பி மேடையில் பேசும் போது நேரடியாக நம்முடைய பெண்களை கொச்சைப்படுத்துகிறார். அதை எதிர்த்து யாரெல்லாம் குரல் கொடுத்தார்களோ அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்கும் நடக்காத ஒரு சர்வாதிகார ஆட்சி தமிழக மண்ணில் நடந்து கொண்டிருக்கிறது. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பது ஒரு குற்றமாக இருந்தால் அதை தொடர்ந்து செய்வோம். தினமும் செய்வோம். ஒரு ஒரு நிமிடமும் செய்வோம். தமிழக சிறைச்சாலை முழுவதும் நிரம்பும் அளவிற்கு செய்வோம். கடைசி பாஜக தொண்டன் தமிழகத்தில் இருக்கும் வரை ஆ.ராசா பேசியதை கேள்வி கேட்போம்.