தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மருத்துவ பணியாளர்களும் இணைந்து மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மருத்துவமனையின் மையத்தில் வைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவச் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், “கிண்டி சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்டது. சைதாப்பேட்டை தொகுதி என்பது கலைஞர் நின்று வென்ற தொகுதி. 2021 மே 7 ஆம் தேதி திமுக அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளை ஒட்டி அரசு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.
15 மாதங்களில் இந்த மருத்துவமனையை கட்டியுள்ளோம். இது தான் முக்கியமான சாதனை. 2015 ஆம் ஆண்டு அறிவித்துவிட்டு 2023 ஆண்டு கூட இரண்டாவது செங்கலை கூட எடுத்து வைக்காத அலட்சியத்தோடு உள்ளார்கள். ஒரு செங்கல் கதை உங்களுக்கு தெரியும். முன்னாடி உதயநிதி உட்கார்ந்துள்ளார். அடிக்கல் நாட்டி 15 மாதங்களில் இந்த மருத்துவமனையை கட்டியுள்ளோம். மக்களுக்கு உண்மையான சேவை நோக்கத்தோடு திட்டத்தை தீட்டுபவர்களையும் மக்களை ஏமாற்றும் நோக்கோடு திட்டத்தை அறிவிப்பவர்களையும் மக்கள் நன்றாக அறிவார்கள்.
இந்த மருத்துவமனை பல்லாண்டுகளுக்கு காப்பாற்ற இருக்கிறது. நம்மிடம் விட்டால் இது போன்ற மருத்துவமனையை ஆண்டுக்கு ஒன்று கட்ட முடியும். அத்தகைய மருத்துவக் கட்டமைப்புள்ள மாநிலம் தமிழ்நாடு. கலைஞர் வழியில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலைஞர் சோதனைகளை சாதனைகளாக மாற்றினார். அவர் வழியில் நாங்களும் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் போது இடைஞ்சலை ஏற்படுத்தி திசை திருப்பப் பார்ப்பார்கள். அதற்காக பணிய மாட்டோம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இன்னும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இதைச் சொன்னால் நீர்வளத்துறை அமைச்சருக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கும். அவர் பலமுறை இந்த கோரிக்கையை வைத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் சிஎம்சி போன்ற பல்வேறு மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. அங்கு சிகிச்சை பெற இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் வருகிறார்கள். அவர்கள் தங்கும் வசதிக்காக வேலூர் மாவட்டத்திலுள்ள தத்துவாச்சாரி உள்வட்டத்தில் பெருமுகை கிராமத்தில் 2 ஹெக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு 250 படுக்கை வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி அமைக்கப்படும்” என்றார்.