தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. ஊரடங்கைத் தளர்த்துவது அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இன்று (10.06.2021) மீண்டும் தமிழ்நாடு முதல்வர், சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மருத்துவத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ஒருவாரம் தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் இந்த ஆலோசனைக்குப் பிறகான முடிவுகள் நாளை தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில், திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் தற்போது வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், ''கரோனா நோய்த்தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன். திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் நான் மேற்கொள்ள இருப்பவை முழுவதும் அரசு சார்ந்த பணிகள். என்னை நேரில் சந்திக்க ஆர்வம் காட்ட வேண்டாம். வரவேற்பு அலங்காரங்கள் வேண்டாம். அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து தனது பணியை அரசு ஓய்வின்றி மேற்கொண்டுவருகிறது. எனவே ஒத்துழைப்பு தர வேண்டும்'' என கேட்டுக்கொண்டுள்ளார்.