முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பாக கடலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ரமேஷ் இன்று (11/10/2021) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, "என்னுடைய முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் என்பவரது மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையினை அடிப்படையாக வைத்து, திமுக மீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது.
ஆகவே நான் உயிரினும் போற்றும் என் தலைவரின் நல்லாட்சியின் மீது வீண் பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ள வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.