நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்தும், 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியுடனும் போட்டியிட்டார். நடந்து முடிந்த இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதோடு குறைவான வாக்கு சதவீதத்தையே பெற்றது.
இதனையடுத்து, கமலின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், தற்போது கமல் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும். தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றி பாடம் கற்பது நாம் கண்ட சரித்திரம். கூட்டணி வைத்துக் கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத்தன்மை அனைவரும் அறிந்ததே. நாம் ஒரு சிறு விதைதான். இது மண்ணை பற்றிக் கொண்டால் அது காடாக மாறும். கட்சி உட்கட்டமைப்பை தனிமனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்காக மாற்றி விளையாடியது இனி நடக்காது. பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு காலம் பதில் சொல்லும். உருமாறிய ம.நீ.ம விரைவில் காண்பீர்கள் '' என தெரிவித்துள்ளார்.