கலைஞரின் மறைவிற்காக பத்திரிகைத்துறை, இலக்கியத்துறை, கலைத்துறை என்று அனைவரும் புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் சினிமாத்துறையினர் கோயம்புத்தூரில் பங்கேற்ற 'மறக்க முடியுமா கலைஞரை' நிகழ்ச்சியில் 'இளைய திலகம் பிரபு' கலைஞரை பார்ப்பதற்காக ஸ்கூலை கட் அடித்துவிட்டு சென்ற நினைவுகளையும், மேலும் அவருடன் 'சாம்பார் வடை' சாப்பிட்டதை பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
பெரியப்பா டாக்டர் கலைஞர் அவர்களை சந்தித்தேன் இரசித்தேன். எனக்கு மிகவும் பிரியமான அப்பாவாக கலைஞர் பெரியப்பா இருந்தார். சின்ன வயசில் பெரியப்பா பெயரை சொன்னால், என் அப்பா என் தலையிலே அடிப்பார். 'ஏன்டா அவர் என்ன உன் கூட படிச்சவரா? பெரியப்பானு கூப்பிட்றா' என்று சொல்லுவார். அப்படித்தான் சிறு வயது முதலே அவரை பெரியப்பா என்று சொல்லி பழக்கப்பட்டேன். அதுக்குப் பிறகு பெங்களூரில் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு முறை சந்தித்தேன். அங்குதான் பெரியப்பா அடிக்கடி தங்குவார். அவர் பெங்களூருவுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், நான் 'ஸ்கூலை கட்' அடிச்சுட்டு அவரை பார்க்க சென்றேன். கழகத் தோழர்கள் எல்லாம் கிளம்பிவிட்டார்கள். அப்பாவின் உதவியாளர் மட்டும் உடன் இருந்தார், நான் மேலே சென்று அப்பாவை சந்திக்க வேண்டுமென்று கேட்டேன். 'சார் ஓய்வு எடுத்துட்டு இருக்கிறார்' என்றார் உதவியாளர். 'எனக்காகக் கொஞ்சம் சொல்லுங்களேன் நான் ஸ்கூலை எல்லாம் கட் அடிச்சுட்டு வந்திருக்கேன்' என்றேன். உள்ள போய் விவரத்தை சொன்னாங்க, ரெண்டே செகண்ட்தான் கதவு திறந்தது 'ஏய் பிரபு, உள்ளே வாப்பா' என்று கையை பிடித்து அழைத்து சென்றார். உள்ளே சென்றதும் பக்கத்தில் உக்காரு என்றார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு கீழே தரையில் உட்காந்துக் கொண்டேன். 'இங்க என்னய்யா பண்ற' என்றார். 'நாங்கல்லாம் இங்கேதானே அப்பா, படிக்கிறோம்' என்றேன். 'ஆமாம், என் நண்பன் கணேசன் பசங்கள்லாம் பெங்களூரில்தான் படிக்கிறாங்கனு கேள்விப்பட்டு இருக்கிறேன்' என்றார். எப்போதுமே நண்பன் என்பதை விட்டுக்கொடுக்காமல் பேசுவார். பிறகு 'இந்த உட்லன்ட்ஸ் ஹோட்டலில் சாம்பார் வடை நல்லா இருக்கும் என்று சொல்லி, அதை சாப்பிட வைத்து பின்னர் 'ஸ்கூலை கட் அடிச்சுட்டு வந்திருக்க அதனால் நீ புறப்படு' என்றார்.