சென்னை, கொளத்தூரில் வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று (14/11/2021) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறீர்கள், தொடர்ச்சியாக இன்றும் ஆய்வு மேற்கொள்ள வந்திருக்கிறீர்கள், தற்போது நலத்திட்ட உதவிகள் வழங்குகிறீர்கள், இது குறித்து உங்கள் கருத்து என்ன?
அது சம்பந்தமாக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லியிருக்கிறோம். இன்று அல்லது நாளை அந்த அறிக்கையை அவர்கள் அளிப்பார்கள். அதன் பிறகு முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் நிச்சயமாக செய்வோம்.
கன்னியாகுமரிக்கு எப்போது செல்கிறீர்கள்?
நாளைக்கு செல்வதற்கு முடிவு செய்திருக்கிறேன்.
டெல்டா பயிர் சேதம் அதிகமாகியிருக்கிறது, பிரதமருக்கு இழப்பீடு கோரி கடிதம் எழுதுவீர்களா?
மொத்த கணக்கீடு வந்த பின்பு அதையெல்லாம் தயார் செய்து பிரதமருக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால், இங்கேயிருக்கின்ற அமைச்சர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ பிரதமரை நேரடியாகச் சந்தித்துக் கோரிக்கை வைக்கப்படும்.
பட்டாளம், புளியந்தோப்பு பகுதிகளில் இன்னும் கழிவுநீர் தேங்கியிருக்கிறதே....
பழைய செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். தேங்கியது உண்மைதான். ஆனால் விரைவாக தேங்கிய நீரை அப்புறப்பபடுத்திவிட்டோம்.
தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறீர்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் அதைப்பற்றி கவலைப்பப்படுவதே கிடையாது. என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது. அதற்காகத் தான் மக்கள் என்னை முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பெரிய வெற்றியைக் கொடுத்தார்கள். நான் இன்றைக்கும் சொல்கிறேன். ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டுப் போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எங்களுடைய கொள்கை, அந்த வழியில் என்னுடைய பயணம் இருக்கும். எதிர்க்கட்சிகள் என்ன புகார் சொன்னாலும், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
அவர்கள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை மழைக்காலம் முடிந்ததற்குப் பிறகு அதற்கென கமிஷன் வைக்கப்பட்டு, எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, நிச்சயமாக யார் குற்றவாளிகளோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.