தஞ்சை மாவட்டம் மதுக்கூர் சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம்(26). இவரை நேற்று முன் தினம் இரவு மதுக்கூர் போலீஸார் கஞ்சா விற்பனை செய்ததாக் கூறி கைது செய்தனர். பின்னர் அவரை பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்காக நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். நீதிபதி முன்பு ஆஜராகிய சிவானந்தம் நீதிபதியிடம், ‘தன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்து, போலீஸார் சிறையில் அடைக்கப் பார்ப்பதாகவும். இதனால் தான் மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், தான் இனி வாழ விரும்பவில்லை என்று கூறிய அவர், தான் ஏற்கனவே எலி மருந்தைத் தின்றுவிட்டதாகவும், தற்போது மீண்டும் விஷம் சாப்பிடுகிறேன் என்றும் கூறி மறைத்து வைத்திருந்த எலி மருந்தை நீதிபதி முன்பாகவே மீண்டும் தின்றுள்ளார். இதில் சிவானந்தம் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சிவானந்தத்தை போலீஸார் உடனடியாக மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.