அண்மையில் மத்திய அமைச்சர் அமித் ஷா 'இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டிய தருணம் இது' என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழகத்தில் அதற்கு எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி' என்று கருத்து தெரிவிக்க, பல்வேறு பிரபலங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தினர். இதற்கு முன்பே இதேபோன்ற இந்தி திணிப்பு தொடர்பான பேச்சுக்கள் தமிழகத்தில் உருவானபோது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் இடம்பெற்ற டி ஷர்ட் அணிந்திருந்தது ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் திரைப்பட நடிகை சுகாசினி இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் பேச வேண்டும் என்றால் இந்தி கற்று கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். இந்நிலையில் இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 'நான் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை ஏ.ஆர் ரஹ்மான் கட்சி. என்னைப் பொறுத்த வரைக்கும் தமிழ் மொழி இணைப்பு மொழியாக பரிசீலிக்கப்பட வேண்டும். இந்தியாவின் மூத்த மொழி தமிழ். அதற்குத்தக்க முயற்சிகளை தமிழக அரசாங்கம் எடுக்க வேண்டும். போன ஆட்சியில் அதிக தமிழ் மையங்களை உருவாக்கினோம். அதுபோன்று அதிக மையங்களை உருவாக்க வேண்டும். பண்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும், தமிழ் கற்றுக் கொடுக்கக்கூடிய மையங்களை உருவாக்க வேண்டும், பன்மடங்கு அவற்றையெல்லாம் உருவாக்கினால் ஒரு காலகட்டத்தில் இணைப்பு மொழியாக தமிழ் வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளை நாம் இன்னும் அதிகமாக எடுக்க வேண்டும். பல பேருக்கு தெரிவதில்லை. ஹிந்தி தான் தேசிய மொழி என்ற கருத்தை அவ்வளவு பெரிய நடிகர் அஜய் தேவ்கன் அழுத்தமாகப் பதிவு செய்கிறார் என்றால் அவருக்கு தெரியவில்லை என்று அர்த்தம். இதைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த டிராக் மிகச்சரியான டிராக் அதற்கு நாம் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்'' என்றார்.