
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, ஆலங்குடி தாலுகாகளில் 8 இடங்களில் எண்ணெய் எடுக்க 1992ல் ஓஎன்ஜிசி மூலம் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன. இந்த ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து எண்ணெய் எடுத்து பரிசோதனை செய்ததுடன் கிணறுகளை மூடிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2017 ல் நெடுவாசலில் புதிய திட்டமாக ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாயகளிடம் நிலம் குத்தகைக்கு எடுத்து டெண்டர் கோரிய நிலையில், மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் தற்காலிகமாக திட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படது. இந்த நிலையில் தான் தற்போது கருக்காகுறிச்சி வடதெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒஎன்ஜிசி கிணற்றில் இருந்து எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்பந்தம் கோரியது. விபரமறிந்த கருக்காகுறிச்சி, கோட்டைக்காடு கிராம விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில், கடந்த 2017ல் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டக்களத்திற்கே நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இது போன்ற திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார். இந்த கடிதம் பற்றிய செய்திகளுக்கு பிறகு கோட்டைக்காடு கிராமத்தில் கூடிய விவசாயிகள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், ஒஎன்ஜிசியால் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.