உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ஒரே நேரத்தில் தம்பதியர் உயிரிழந்த சம்பவம் நாகை பகுதியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
நாகை அடுத்துள்ள அந்தனபேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு. இவரும் இவரது மனைவி ராஜலட்சுமியும் நாகை துறைமுகத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்துவந்தனர். வழக்கம்போல் நேற்று (19.10.2021) வேலைக்குச் செல்வதற்கு முன்பு காலை உணவு தயார் செய்வதற்காக ராஜலட்சுமி, பாத்திரத்தில் நண்டு எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் வீட்டு வழியாகச் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளில் ஒன்று அறுந்து ராஜலட்சுமியின் மேல் விழுந்தது. ராஜலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டினுள்ளே இருந்து ஓடிவந்த கணவர் பழனிவேலு, தனது மனைவியைக் காப்பாற்ற மின் கம்பியைக் கையால் தூக்கி வீச முயலும்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தால் அந்தப் பகுதியே சோகமாக மாற, அங்கு வந்த போலீசார் உயிரிழந்த கணவன், மனைவி இருவரின் உடலையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மின் விபத்து குறித்து நாகை நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நாகையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒருசேர உயிரிழந்த சம்பவம் அந்தனபேட்டை கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.