திருச்சுழி தாலுகா – அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம், கடந்த வருடம் வயர்மேன் வேலை கிடைத்து, மதுரை – அரசரடி மின்வாரியத்துறையில் பயிற்சி பெற்றுவந்தார். மலையாளியான இவருடைய மனைவி அனிதாவுக்கு(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஏற்கனவே கேரளாவில் பாதிரியார் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அனிதா முத்துராமலிங்கத்தை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
முத்துராமலிங்கம் மின்வாரியம் பணியில் சேருவதற்கு முன்பு, சொந்தமாக ஒரு ஒர்க்ஷாப்பு வைத்திருந்திருக்கிறார். அங்கே வேலை பார்த்த மலையரசன் என்பவருக்கும் முத்துராமலிங்கம் மனைவி அனிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பயிற்சிக்காக சொந்த கிராமத்திலிருந்து முத்துராமலிங்கம் மதுரை சென்றுவர, தவறான பழக்கத்தை மலையரசன் மேலும் தொடர்ந்தார். இந்த விவகாரம் முத்துராமலிங்கத்துக்குத் தெரிந்ததும், மனைவியைக் கண்டித்துள்ளார். அதில் கோபம் அடைந்த அனிதா, தனது உறவுக்கு குறுக்கே நிற்கும் கணவர் முத்துராமலிங்கத்தைக் கொலை செய்துவிட, மலையரசனுடன் சேர்ந்து திட்டமிட்டார்.
கடந்த 1-ஆம் தேதி சொந்த கிராமத்துக்கு வந்த முத்துராமலிங்கம், இரவில் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அனிதாவும், மலையரசனும், அவனுடைய நண்பர் சிவாவும் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். 2-ஆம் தேதி அதிகாலையில், டூவீலரில் மலையரசனுக்கும் சிவாவுக்கும் நடுவில் முத்துராமலிங்கத்தின் உடலை உட்கார்ந்த நிலையில் எடுத்துச்சென்று, நரிக்குடி – திருச்சுழி சாலை காரேந்தல் பஸ்-ஸ்டாப் அருகில் வீசியெறிந்துவிட்டு, விபத்து நடந்ததைப் போல் செட்டப் செய்துவிட்டு வந்தனர்.
காரேந்தல் பஸ்-ஸ்டாப் அருகில் சடலம் ஒன்று கிடக்கும் தகவலறிந்து உடலை மீட்க வந்த திருச்சுழி காவல்நிலையப் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். டூவீலரில் எடுத்துச்சென்றபோது, சடலத்தின் இரு கால்விரல்களும் தரையில் உரசியபடியே வந்ததால், கால்கட்டை விரல்கள் முழுமையாகத் தேய்மானம் அடைந்திருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. விபத்தா? கொலையா? என விசாரணை நடத்தியபோது, விருதுநகரிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து நேராக முத்துராமலிங்கம் வீட்டுக்குச் சென்றது. பிறகுதான், அனிதாவிடமிருந்து மேற்கண்ட வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
43 வயதான அனிதாவிடம் தகாத உறவு வைத்திருந்த 22 வயது மலையரசன், அனிதாவின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தியிருக்கிறார். மேலும், இந்த விவகாரத்தில் தான் மட்டுமின்றி தனது நண்பன் சிவாவையும் (வயது 23) கொலை செய்வதற்கு கூட்டுச் சேர்த்துள்ளார். தற்போது அனிதா, மலையரசன், சிவா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.