Husband and wife passes away near salem

Advertisment

சங்ககிரி அருகே, திருமணமான ஒரே ஆண்டில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறை விசாரணைக்குப் பயந்து, கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (33). சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவருடைய மனைவி பிரியா (27). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தனி வீட்டில் வசித்துவந்தனர். கணவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் தினமும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

மதுப்பழக்கத்தைக் கைவிடுமாறு மனைவி கூறியும், கார்த்திக் மேலும் குடிப்பழக்கத்தை தீவிரமாக தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் புதன்கிழமை (அக். 20) இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் கார்த்திக். அப்போதும் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு வெடித்துள்ளது. சண்டை ஓய்ந்த நிலையில் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர்.

Advertisment

வியாழக்கிழமை (அக். 21) காலையில் எழுந்த கார்த்திக், அருகில் உள்ள கடையில் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கச் சென்றார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, படுக்கை அறையில் பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தன்னால்தான் மனைவிஇப்படியொரு முடிவை எடுத்தார் என்ற குற்ற உணர்ச்சியால் கதறி அழுதபடியே, மாரியம்மன் கோயில் அருகே ஓடிச்சென்றார். அங்கு தன் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும், அருகில் உள்ள ஒரு வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியின் தற்கொலைக்குத் தன்னுடைய குடிப்பழக்கம்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் கார்த்திக்கும் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது காவல்துறை விசாரணைக்குப் பயந்தும்கூட தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி டிஎஸ்பி நல்லசிவம், சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) தேவி உள்ளிட்டகாவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றனர். பிரியா, கார்த்திக் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரியா உண்மையில் தற்கொலைதான் செய்துகொண்டாரா அல்லது குடும்பத் தகராறில் அவரை கணவரே கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டது போல செட்டப் செய்தாரா? கார்த்திக் தற்கொலையின் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருமண பந்தத்தில் நுழைந்த ஒரே ஆண்டில் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வைகுந்தம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.