புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த நிலையில் எச்.ராஜா இன்று (22.10.2018) காலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். காலை 10 மணி அளவில் நீதிபதி சி.டி. செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு ஆஜரானார்.
அப்போது, எச்.ராஜா சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆஜராகி மனு அளித்தார். அந்த மனுவில், நீதிமன்றத்தை அவதூறாக பேசியது உண்மை தான். காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தபோது உணர்ச்சியின் வேகத்தில் கோபம், உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாகவும், இதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருந்தார். எச்.ராஜா மன்னிப்பு கோரியதையடுத்து வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.