வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. வங்கக்கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும் இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் நவ். 1 ஆம் தேதி வரையும், தென்கிழக்கு அரபிக்கடலில் 3 ஆம் தேதி வரையும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இரு நாட்களுக்கு அதீத கனமழை இருக்கும் என்பதால் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வரும் ஒன்றாம் தேதி முதல் தென் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், கடலூரில் மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.