/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1180.jpg)
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கடலூர் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின்போது கடலூரில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாமல், மக்கள் பயன்பாடு அல்லாமல் புதர்மண்டி மூடியே இருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கடலூர் சட்டமன்ற உறுப்பினராக திமுக உறுப்பினர் கோ. ஐயப்பன்தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதுப்பொலிவுடன் மக்கள் பயன்பாட்டிற்காக 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நேற்று (13.06.2021) திறக்கப்பட்டது.
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்துவைத்தார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருண்ட ஆட்சி இருந்ததற்கு உதாரணமாக புதர் மண்டியும், பாம்புகளின் கூடாரமாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத அலுவலகமாகவும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திகழ்ந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றிடும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிகாட்டும் மையமாக கடலூர் சட்டமன்ற அலுவலகம் இனி இயங்கும்" என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_279.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "மேட்டூர் அணை திட்டமிட்டபடி 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார். முதல்வரின் தொடர் நடவடிக்கையால் மேட்டூர் அணை திறப்பு விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. காவிரி டெல்டா பகுதி மட்டுமின்றி மேட்டூர் அணை பாசன வசதிபெறும் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாய பணிகள் சிறப்புடன் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே விதை மற்றும் வேளாண் இடுபொருட்கள் அந்தந்த பகுதிக்கு குறைவின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி விதை மற்றும் உரங்கள் அனைத்து விவசாய தரப்பினருக்கும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தரமான விதை மற்றும் உர விற்பனையில் பதுக்கல் உள்ளிட்டவை இல்லாமல் விவசாயிகள் முழுப்பயனையும் பெறும் வகையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி முழு பாசன வசதி பெறும் வகையில் காவிரி நீர் கடைமடைவரை சென்று விவசாயிகள் பயன்பெறும் வகையில் தூர்வாரும் பணி முழுமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இள. புகழேந்தி, திமுக மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்டப் பொருளாளர் குணசேகரன், நகரச் செயலாளர் ராஜா, முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன், வி.ஆர். அறக்கட்டளை நிர்வாகி விஜயசுந்தரம், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத் தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)