நீலகிரியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விடுமுறைக் காலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 110 சட்டவிரோத கட்டுமானங்கள் வரன் முறைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் கோரிக்கை மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் தான் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதாகத் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத ரிசார்ட்கள் நீலகிரியில் அதிக அளவில் உள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் நச்சுப் புகை பரவுவதாகவும், இயற்கையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். நீலகிரியில் குடியிருப்பு கட்டிடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி வழங்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குடியிருப்பு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் தங்கியிருக்கிறார்களா என்பது குறித்து மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுசெய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், குடியிருப்புகள் வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது சட்டவிரோதம் எனத் தெரிவித்தனர். விடுமுறைக் காலங்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகும் என்பதால் போதுமான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.