புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அம்மாநில சுகாதாரத்துறை வழங்கும் பட்டியலில் உள்ள, தகுதி வாய்ந்த மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் என, மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு, மத்திய சுகாதாரப் பணிகள் இயக்குனரகத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்.சி.சி) மாணவர் சேர்க்கை நடத்துகிறது. இந்தக் கலந்தாய்வில், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்த இடங்களில், 64 இடங்கள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் குறைந்தது மூன்று ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும், மேல்நிலைக் கல்வியைப் புதுச்சேரியில் படித்திருக்க வேண்டும் என்ற தகுதி உடையவர்கள் உள்ளூர் மாணவர்களாகக் கருதப்படுவார்கள். ஆனால், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், உள்ளூர் ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஹரிபிரசாத் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ளூர் ஒதுக்கீட்டு இடங்களுக்கு புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து தகுதி வாய்ந்த மாணவர்களைக் கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மருத்துவக் கலந்தாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டார்.