Skip to main content

“வெளிநாட்டினரின் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்”- டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

High court orders DGP to set up special unit to monitor foreigners' movements

 

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்தத் தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழில், வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட  காரணங்களுக்காக இந்தியா வரும் இலங்கை, நைஜீரியா, சீனா, ஈரான், பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாடுகளைச்  சேர்ந்த பலர், விசா காலம் முடிந்தும் இந்தியாவிலேயே தங்கியிருந்து  குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுபோன்ற வழக்கில் தொடர்புடைய சுரேஷ் ராஜ் உள்ளிட்ட பல வெளி நாட்டினர், ஜாமீன் கோரியும், முன் ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 13 ஆயிரத்து 289 பேர் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பதாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.  இதைப் பதிவு செய்த நீதிபதி தண்டபாணி, வெளிநாட்டவர்கள் இந்தியா வரும்போது, அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும் அவருடைய வருகை மற்றும் புறப்பாடு உள்ளிட்டவற்றைக்  கண்காணிக்கக் குடியுரிமை அதிகாரிகள் இருப்பதாகவும், மேலும் வெளிநாட்டவர்களின் வருகையைப் பதிவு செய்யப் பதிவு அலுவலகங்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  பல வெளிநாட்டினர், இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கிக் குற்றச் செயல்களில்  ஈடுபடுவதாகவும்,  இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், இதைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

 

விசா காலம் முடிந்த வெளிநாட்டினரை உடனடியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க  மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளதாகவும், அவற்றை மாநில அரசுகள் பின்பற்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார். குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களை, தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகு, உடனடியாக அவர்களைச் சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர் நீதிபதி. விசா காலம் முடிவடைந்து தங்கியிருக்கும் பலர் போலி ஆவணங்கள் மூலமாக இந்திய அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளதாகவும் வேதனை  தெரிவித்த நீதிபதி வெளிநாட்டவர்களைக் கண்காணிப்பதற்கு மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

இந்தியா வரும் வெளிநாட்டினரின்  பாஸ்போர்ட் , விசா உள்ளிட்ட தகவல்களைப் பதிவு அலுவலகங்கள், மாநில காவல் துறைக்கு வழங்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் விசா காலம் முடிவடைந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்களை அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். சிறைகளில் உள்ள வெளிநாட்டினர்,  அவர்கள் தங்களுடைய தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகு அவர்களைச் சொந்த நாடுகளுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். மேலும், பல கொடுங்குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறி, அனைத்து ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்