Skip to main content

நரிக்குறவ மக்களுக்கு பட்டாநிலம் வழங்க வேலூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு!

Published on 07/12/2017 | Edited on 07/12/2017
நரிக்குறவ மக்களுக்கு பட்டாநிலம் வழங்க வேலூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு!

நரிக்குறவ சமூக மக்களுக்கு வீட்டு மனைகளுக்கான பட்டா வழங்க உரிய திட்டத்தை வகுக்குமாறு வேலூர் மாவட்டக் கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



வேலூர் மாவட்டத்தில் சாலை ஓரங்களில் வசிக்கும் நரிக்குறவ மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் என்.ராஜா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த பின் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நரிக்குறவர் இன மக்கள் நாடோடிகளாக தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 0.1 சதவீதம் மட்டுமே இந்த இன மக்கள் உள்ளனர்.

இவர்கள் பேருந்து நிலையங்களிலும், ரயில்வே நிலையங்களிலும், டெண்ட்டுகளிலும் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவர்கள். ஏழ்மை நிலையில் நோய் பரவும் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தனித்து விடப்பட்டவர்கள்” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், நரிக்குறவர் இன மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் தரவேண்டும் என்றும், அடிப்படை வசதிகள், பாதுகாப்பான இருப்பிடம் குறிப்பாக பட்டா நிலம் வழங்கவேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

எனவே, நரிக்குறவர் இன மக்களுக்கு பட்டா வழங்கக்கோரிய மனுதாரரின் மனுவை வேலூர் கலெக்டர் பரிசீலித்து சட்டப்படி உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும். மேலும், இவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து திட்டத்தை வகுக்கவேண்டும். இதுதொடர்பாக 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்