நாகூர் தர்கா நிர்வாகத்தை தற்காலிக குழுவிடமிருந்து அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வக்பு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017- ஆம் ஆண்டு நாகூர் தர்கா நிர்வாகம் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியான அக்பர் அடங்கிய தற்காலிக குழுவை நியமித்தது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், நான்கு மாதங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டக் குழு இன்னும் தொடர்வது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, நாகூர் தர்கா நிர்வாகத்தைத் தொடர விரும்பவில்லை என்றும், வக்பு வாரியத்திடம் ஒப்படைப்பதாகவும் தற்காலிகக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, 1946- ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டப்படி, தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் வழங்கலாம் என்று மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர். அதனையேற்ற நீதிபதிகள், நாகூர் தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.