வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, தாழ்வு மண்டலமாக மாறியது. இது இலங்கை நோக்கி நகர்ந்து கரையைக் கடந்தது. இதனால் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குளித்தலை, வேலாயுதபாளையம், அரவக்குறிச்சி, மாயனூர், லாலாபேட்டை, பரமத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அவ்வப்போது சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை குளித்தலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில், மழை நீர் மற்றும் கழிவு நீர் சாலையில் தேங்கியதால் துர்நாற்றம் வீசியது. பள்ளி முடியும் நேரத்தில் பெய்த மழையால் பள்ளி மாணவ மாணவிகள் நனைந்தபடி வீட்டிற்குச் சென்றனர்.
இந்த கனமழையால் விளை நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, நெல் வயல்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.