Skip to main content

கனமழை எதிரொலி; நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்

Published on 30/11/2024 | Edited on 30/11/2024
rain

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) மாலை 5.30 மணி நிலவரப்படி புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக - புதுவை கடற்கரையில் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாகக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கோவளம் பகுதியில் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து இன்றி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

பேருந்து; ரயில்; விமான சேவை என அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களின் புறப்படும் இடங்கள் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை விமான நிலையம் இன்று இரவு 7:30 மணி வரை மூடப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டு நாளை அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கனமழையால் சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில்  மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துவதில் இருக்கக்கூடிய இடர்பாடுகளை கருத்தில் கொண்டு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். டிசம்பர் 10 ஆம் தேதி வரை இந்த நான்கு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அபராதத் தொகை இல்லாமல் கட்டணத்தை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்