தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மிகக் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டில் கனமழை பொழியும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 5 நாட்களுக்குக் கனமழை நீடிக்கும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காட்டில் 10 சென்டி மீட்டர் மழையும், பெரியாறு, சின்னக்கல்லாறு பகுதிகளில் தலா 7 சென்டி மீட்டர் மழையும், திருவண்ணாமலை, அமராவதி அணை உள்ளிட்ட பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.