அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக ஒரு நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 27 ஆம் தேதி பெரம்பலூர். திண்டுக்கல், நீலகிரி, தேனி, சேலம், திருப்பூர், அரியலூர், மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.