எதிர்பாராத விதமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நேற்று (30/12/2021) மதியம் முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று (30/12/2021) மாலை அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப இருசக்கர, கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணித்த பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
இந்த திடீர் மழைப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றுதான் மழை பெய்யும் என எதிர்பார்த்தோம். இன்று மிக கனமழை பெய்யும் என கணித்திருந்த நிலையில் நேற்றே மழை பெய்யத் தொடங்கி விட்டது. கடலில் இருக்கும் என கணிக்கப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நிலப்பகுதிக்கு திடீரென நகர்ந்ததே அதிக கனமழைக்கு காரணம். அதி கனமழையைக் கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. கணிப்புகளையும் தாண்டி காற்றின் நகர்வு மற்றும் வேகத்தால் மழையின் அளவு மாறுபடக்கூடும். சென்னையில் பெய்த அதிக கனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல; வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே காரணம்'' என்றார்.
இன்றும் சென்னையின் பல பகுதிகளில் மழைபொழிந்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்குக் கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்குப் பரவலாக கனமழை பொழியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.