2020 ஜல்லிக்கட்டில், அவனியாபுரம் முதல் அலங்காநல்லூர் வரை களத்தில் நின்று கலக்கிய காளை 'ராவணன்'. இது புதுக்கோட்டை எஸ்.ஐ, அனுராதாவின் காளை. இந்தக் காளை பற்றி ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை பேச்சாக இருந்தது. இந்த காளை ராவணன், எஸ்.ஐ அனுராதாவுக்கு எப்படி வந்தது. அதன் பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனுராதா பளு தூக்கும் வீராங்கனை. காமன் வெல்த் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை சென்று நூற்றுக்கணக்கான பதக்கங்களைக் குவித்தவர். அவருடைய அண்ணன் மாரிமுத்து படிப்பை துறந்து கூலி வேலைசெய்து அனுராதா இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளார். விளையாட்டில் சாதித்ததால், தஞ்சை மாவட்டம் தொகூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ பணிகிடைத்தது.
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று வந்த அனுராதாவுக்குப் பாராட்டுகள் குவிந்தது. அப்படித்தான் தஞ்சையில் உள்ள வினோத், தன் மனைவியின் தோழியான அனுராதாவுக்கு, தஞ்சை வத்திராயிருப்பில் இருந்த காளையை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். மேலும், 'உனக்கும் இந்த காளை பெருமை சேர்க்கும்' என்று சொல்லி கொடுத்தார். தன் வீட்டுக்கு வந்த காளைக்கு அனுரதாவின் அண்ணன் மாரிமுத்து 'ராவணன்' எனப் பெயர் வைத்து, குடும்பப் பெண்களும் சேர்ந்து வளர்த்தார்கள். மாரிமுத்து தன் காளையான அசுரனுடன், ராவணனுக்கும் பயிற்சி கொடுத்தார்.
அனுராதாவுக்கு பரிசாகக் கிடைத்த காளை என்பதால் அவரது பெயரிலேயே அவனியாபுரத்தில் முதன் முதலில் களமிறக்கினார்கள். களத்தில் நின்று விளையாடிய ராவணனை அந்த களமே பாராட்டியது. பின்னர் ஊடகங்களின் பார்வையும் ராவணன் பக்கம் திரும்பியது. 'சிறந்த காளை' என்ற பெயரோடு வீட்டுக்குத் திரும்பினான் ராவணன். அடுத்த நாள் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிகட்டில் காலை 8.30 மணிக்கு அனுராதாவின் காளை ராவணன் களமிறங்கி கலக்கியதும் நாள் முழுவதும் ராவணன் பேச்சு ஓடியது.
அலங்காநல்லூரின் சிறந்த காளை ராவணன் தான் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால், மாலை முடிவு அறிவித்த போது ரசிகர்கள் துவண்டு போனார்கள். காரணம் ஜெர்சி இனக் காளைக்கு முதல் பரிசும், நாட்டு இனக் காளையான ராவணனுக்கு இரண்டாம் பரிசும் அறிவித்தார்கள். நாட்டினத்தைக் காக்கத்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டமே நடந்தது. ஆனால் அரசின் முடிவு மாற்றி கலப்பினப் பக்கம் போகிறது என்ற சர்ச்சை எழுந்தது. ஆனாலும் அந்த வருடம் மட்டுமின்றி இந்த வருடமும் ராவணன் தமிழகத்தின் அத்தனை பெரிய வாடிவாசலிலும் நின்று கலக்கியது.
இந்த நிலையில், கடந்த வாரம் முரட்டுச் சோழகன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட ராவணன் யாரிடமும் பிடிபடவில்லை. காளையை வளர்த்த தம்பி மாரிமுத்து கூட கயிறு வீசியும் ஒருவாரமாகப் பிடிபடாமல் கிராமங்களில் உள்ள காடுகளில் சுற்றியது. இந்த நிலையில் தான் கிள்ளுக்கோட்டையில் உள்ள ஒரு தைல மரக்காட்டிற்குள் பெரிய புற்றை, கொம்பால் குத்தி உடைத்தது. பின்னர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது.
இது குறித்து அனுராதாவின் உறவினர்கள் கூறும் போது, “முரட்டுச் சோழகன்பட்டியில் பிடிபடாமல் தப்பிய ராவணன், பல நாட்கள் காடுகளில் சுற்றி இருக்கிறது. கிள்ளுக்கோட்டை காட்டில் புற்றில் இருந்த நல்லபாம்பு செல்வதைப் பார்த்து ராவணன் பெரிய உயரமான புற்றை தன் கொம்பால் குத்தி உடைத்திருக்கிறது. அப்போது அந்தப் பாம்பு ராவணனை கடித்திருப்பதால், அதே இடத்தில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்து போய் தூக்கி வந்து மாலைகள் அணிவித்து மனிதர்களுக்குச் செய்வது போல அத்தனை சடங்குகளும் செய்தோம். காளை ஆர்வலர்கள், காளைபிடி வீரர்கள், கிராம மக்கள் என அனைவரும் மாலை அணிவித்துச் சென்றார்கள். சாதித்த காளைகளை சாவு தேடி வருவது வேதனையாக உள்ளது. கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது என்றனர். பரிசாக வந்த ராவணன், பரிசுகளை அள்ளிக் குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால், இன்று அதே ரசிகர்கள் கண்ணீரோடு மாலை அணிவித்து வருவதைக் காண வேதனையாக உள்ளது” என்றனர்.
மேலும் தனது காளை இறந்ததை அறிந்து பாட்டியாலாவில் பயிற்சியில் இருக்கும் அனுராதா கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.