Skip to main content

மாணவனின் மார்பில் தாக்கிய தலைமை ஆசிரியர்! 

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

The head master who hit the student in the chest!

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் ஜீவா (16). இவர், திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் அவர், வயிற்றுப்போக்கின் காரணமாக பள்ளி ஆசிரியரிடம் அனுமதி வாங்கி வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் பள்ளிக்குத் தாமதமாக திரும்பியதால் பள்ளியின் தலைமையாசிரியர் அந்த மாணவனின் புத்தகப் பையை ஒளித்து வைத்துவிட்டு தனது அறைக்கு வரச் சொல்லியிருக்கிறார். 

 

பின்னர், முட்டி போட வைத்து தலைமையாசிரியரும் அலுவலக உதவியாளரும் சேர்ந்து மாணவனின் மார்பில் எட்டி உதைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். இதையடுத்து, “உனது புத்தகப்பை உனது வகுப்பறையில் இருக்கு” என்று சொல்லி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வகுப்பறையிலும் முட்டி போடச் சொல்லி கைகளைக் கட்டி, முகம், முதுகு, மார்பு பகுதிகளில் சரமாரியாக அடித்திருக்கிறார். மேலும், “உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்” எனக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியதோடு, சக மாணவர்களைத் தலையில் கொட்டச் சொல்லி சித்திரவதை செய்திருக்கிறார்.

 

The head master who hit the student in the chest!

 

வலி தாங்க முடியாமல் மாணவன் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து தனது பெற்றோரிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து மாணவனை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

 

இதுகுறித்து மாணவனின் பெற்றோர் கூறுகையில், “ஆசிரியர்கள் என்பவர்கள் குருவுக்கு சமமானவர்கள். மாணவன் தவறு செய்தால் பெற்றோர்களாகிய எங்களை அழைத்துச் சொல்லியிருக்க வேண்டும். இதுபோல மிருகத்தனமான சித்திரவதை செய்த ஆசிரியருக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும்” என்றனர். இது சம்பந்தமாக கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்