ஆதி திராவிடர் நலப்பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த கழிப்பறையைப் பள்ளியின் தலைமை ஆசிரியரே தூய்மை செய்த சம்பவம் நாகை மாவட்ட அரசுப் பணியாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கரோனா பரவலின் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், பள்ளி வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டன.
நாகையை அடுத்துள்ள பாலையூர் ஒன்றியம் அழிஞ்சமங்கலம் பகுதியில் நூறாண்டுகளைக் கடந்த ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. அந்தப் பள்ளியில் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாததால் அப்பள்ளியில் உள்ள கழிவறைகள் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும், நோய்த் தொற்று உருவாகும் நிலையிலும் இருந்தன. தற்போது பள்ளி திறக்கப்பட்டு செயல்படத் துவங்கியிருக்கும் நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் இல்லாததால் பள்ளியின் கழிப்பறையைத் தலைமை ஆசிரியரே தூய்மை செய்திருக்கிறார். அவர் கழிப்பறையை சுத்தம் செய்யும் காட்சிகள் தற்போது ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் வெளியாகி, அவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ‘அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருபவர் வீரப்பன். கரோனா கட்டுப்பாடுகளால் பல மாதங்களாக மூடிக்கிடந்த பள்ளியின் பல இடங்களிலும் புதர் மண்டியும், அசுத்தமான நிலையிலும் இருந்தது. குறிப்பாக கழிப்பறைகள் பயன்படுத்தவே முடியாத நிலையில் இருந்தன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக, தினசரி பள்ளியின் கழிவறையை மாணவர்கள் வருவதற்கு முன்பே காலையிலேயே வந்து தலைமை ஆசிரியர் வீரப்பனே தூய்மை செய்துவருகிறார். இதனைக் கண்ட மாணவர் ஒருவர், அவருக்கே தெரியாமல் அவர் சுத்தம் செய்யும் காட்சிகளை செல்ஃபோனில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்தக் காட்சிதான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது” என்கிறார்கள்.