மாமியாரிடமே 62 பவுன் நகையை கொள்ளையடித்த மருமகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் உள்ள அன்னை தெரசா பகுதியைச் சேர்ந்தவர் அற்புதராஜ். இவர் அதே பகுதியில் பேன்சி கடை ஒன்று நடத்தி வருகிறார். இவருடைய மூத்த மகன் தங்கதுரை. சென்னையில் மனைவி அஸ்வினி மற்றும் ஐந்து வயது மகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் முத்தையாபுரத்தில் உள்ள தந்தை வீட்டில் சில நாட்களுக்கு முன்பு மனைவி அஸ்வினி மற்றும் ஐந்து வயது மகளை விட்டுவிட்டு தங்கதுரை சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை நேரத்தில் அற்புதராஜ் தான் நடத்திவரும் பேன்சி கடைக்கு சென்று விட்டார். மாலை வேளையில் 7:30 மணி அளவில் மாமியார் செல்வராணி, மருமகள் அஸ்வினி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது பர்தா அணிந்து கொண்டு வந்த பெண் ஒருவர் வீட்டில் புகுந்து மருமகள் மற்றும் மாமியாரை கட்டிப்போட்டு கழுத்து, காது மற்றும் பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 62 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த புகாரில் போலீசார் விசாரணை நடத்திய பொழுது அஸ்வினி முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஸ்வினி தன்னுடைய அக்காவையே பர்தா அணிந்து வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. மாமியாருடன் தனியாக வீட்டில் இருக்கும் பொழுது அஸ்வினி தொலைபேசி மூலம் அக்காவை அழைத்து கத்தியைக் காட்டி மிரட்டி திட்டமிட்டு கொள்ளையடித்தது தெரிய வந்தது.
மேலும் மருமகள் அஸ்வினியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் கணவருடன் வசித்து வந்த பொழுது அஸ்வினி ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் சொந்த நகையை அடமானம் வைத்து ஆன்லைன் டிரேடிங் செய்துள்ளார். ஆனால் அவை லாஸில் முடிந்துள்ளது. நகை எங்கே என கணவர் கேட்கும் பொழுது ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில் நகையை மீட்பதற்காக பணம் தேவைப்படுவதால் மாமியாரின் நகையையே கொள்ளையடிக்க மருமகள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.